திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்னும் போட்டி ஏற்பட்டபோது, அவர்களுக்கு உண்மையை உணர்த்த சிவபெருமான் அடிமுடி காணா ஒளிவடிவாகத் தோன்றினார். இந்நிகழ்வு நிகழ்ந்த இடம் திருவண்ணாமலை. அவ்வாறு ஒளிமயமாக சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றிய தலங்கள் ஜோதிர் லிங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Advertisment

nageshwarar

இந்தியாவில் 64 ஜோதிர்லிங்கங்கள் உள்ளதாகக் கூறுவர். அவற்றுள் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் முக்கியமானவை. அவை:

சோமநாதர் ஆலயம் (குஜராத்).

மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்).

மகாகாளேஸ்வரர் (உஜ்ஜயினி, மத்தியப் பிரதேசம்).v ஓங்காரேஸ்வரர் (மத்தியப் பிரதேசம்).

கேதாரநாதர் (கேதார்நாத், இமாச்சலப் பிரதேசம்).

ராமநாதசுவாமி (ராமேஸ்வரம், தமிழ்நாடு).

கிருஷ்ணேஸ்வரர் (அவுரங்காபாத், மகாராஷ்டிரா).

பீமாசங்கர் (மகாராஷ்டிரா).

காசி விசுவநாதர் (உத்திரப்பிரதேசம்).

திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரா).

நாகேஸ்வரர் (குஜராத்).

Advertisment

சிறப்புவாய்ந்த இந்த 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் நாகேஸ்வரர் ஆலயமும் ஒன்று. சிவபுராணத்தில் இவ்வாலயத்தைப் பற்றி ஒரு வரலாறு கூறப்பட்டுள்ளது.

சுப்ரியன் என்னும் ஒரு சிவபக்தர் இருந்தார். அவர் தினமும் உள்ளன்போடு சிவபெருமானை வணங்கிவந்தார். எப்போதும் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

அந்தப்பகுதியை தாருகன் என்னும் அரக்கன் ஆண்டுவந்தான். சுப்ரியனின் சிவவழிபாடு கண்டு அவனுக்கு வெறுப்பாக இருந்தது. எனவே அவர் சிவனை வழிபடும்போது பல்வேறு இன்னல்களைக் கொடுத்துவந்தான் அந்த அரக்கன்.

Advertisment

ஒருநாள் சுப்ரியன் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவரைத் தாக்கிய அரக்கன், அவருடன் பயணம் செய்த அனைவரையும் சிறையிலடைத்தான்.

nageshwar

அப்போதும் சிறையிலேயே தனது சிவபூஜையைத் தொடர்ந்து செய்துவந்தார். தன்னுடன் சிறையிலிருந்த மற்றவர்களையும் சிவபூஜை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை அறிந்த தாருகன் மிகுந்த கோபத்திற்கு ஆளானான். சுப்ரியன் உட்பட சிறையிலிருந்த அனைவரையும் கொன்றுவிடும்படி ஆணையிட்டான்.

அதன்படி காவலர்கள் அவர்களைக் கொல்ல வரும்போது, சுப்ரியன் சிறிதும் கலங்காமல் சிவனையே எண்ணி தியானம் செய்தார். அப்போது அங்கு ஜோதிவடிவில் சிவபெருமான் தோன்றி, தன் பாசுபதாஸ்திரம்மூலம் தாருகனை அழித்தார். தன்மீது அளவற்ற பக்திசெலுத்திய சுப்ரியனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

இவ்வாறு சிவபெருமான் வெளிப்பட்ட இடமே நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கத் தலமாகும். தோல்நோய், விஷநோய், பூச்சிக்கடி, தூக்கமின்மை, மனநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து வழிபட்டு குணமடைகிறார்கள்.

வாய்ப்புள்ளவர்கள் குஜராத் மாநிலம், துவாரகைக்கு அருகேயுள்ள இந்த ஜோதிர்லிங்கத் தலத்தை தரிசித்து வரலாமே.